கரோனா மருந்து வாங்கியதில் முறைகேடு: கவுதம் கம்பீர் அறக்கட்டளை மீது புகார்
கரோனா சிகிச்சைக்கு மருந்துகள் கொள்முதலில் முறைகேடு குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீரின் ‘கவுதம் கம்பீர் அறக்கட்டளை’ கரோனா மாத்திரை ஒன்றை மொத்தமாக கொள்முதல் செய்தது குறித்து நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் டெல்லி மருந்து கட்டுப்பாட்டுத் துறை நேற்று சமர்ப்பித்த விசாரணை அறிக்கையில், “கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஃபேபிஃப்ளூ மாத்திரைகள், மற்றும் மருத்துவ ஆக்சிஜனை கவுதம் கம்பீர் அறக்கட்டளையானது விதிகளுக்குப் புறம்பாக கொள்முதல் செய்து, இருப்பு வைத்து, விநியோகித்து குற்றம் புரிந்துள்ளது. மேற்கண்ட சட்டவிதிகளின்படி இது விசாரணைக்குரிய அல்லது தண்டனைக்குரிய குற்றமாகும்” என்று கூறப்பட்டுள்ளது.