பாட்னா: நாட்டில் கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் மிக முக்கிய ஆயுதமாக விளங்கும் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஒரே நாளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி பிகார் மாநிலம் புதிய சாதனை படைத்துள்ளது.
பிகார் மாநிலத்தில் கடந்த புதன்கிழமை ஒரே நாளில் 6,62,507 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை முன்னின்று நடத்தி வரும் சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரத்யய் அம்ரித் இதனை உறுதி செய்துள்ளார்.
மாநில முதல்வர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்களின் அறிவுறுத்தல்படி, மாநிலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு ஒரே நாளில் 6,62,507 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டிலேயே ஒரே நாளில் 6 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், ஜூலை மாதம் முதல் அடுத்த 6 மாதத்துக்குள் மாநிலத்தில் 6 கோடிப் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.