தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச் சங்கம் சார்பில்
தமிழக முதல்வருக்கு மனமார்ந்த நன்றி
தமிழக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்ற நாள் முதல் அனைத்துத் தரப்பு மக்களின் மனமறிந்தும் எண்ணவோட்டத்தை அறிந்தும் அறிவிப்புகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி அவர்கள் பத்திரிகையாளர்களின் மனம் குளிரும்படியும் கோரிக்கைகள் நிறைவேறும்படியும் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பதற்கேற்ப ஒரு பத்திரிகையாளரான கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் புதல்வரான மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளர்களுக்குத் தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்த தயாராக இருப்பதை உணர்த்தும் வகையில் தமிழ்நாடு செய்தித் துறை அமைச்சர் பெ.சாமிநாதன் அவர்களை தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேச அறிவுறுத்தியதையடுத்து தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்க சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் அமைச்சரை இன்று நேரில் சந்தித்தனர். அவர்களிடம் பத்திரிகையாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படவும், உரிமைகள் முழுமையாக கிடைக்கவும் நமது சங்கம் சார்பில் கூறப்பட்ட அனைத்து கருத்துகளையும் கோரிக்கைகளையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட அமைச்சர் பத்திரிகையாளர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு மாநில அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று உறுதியளித்தார்.
கடந்த பத்து ஆண்டுகளாக பத்திரிகையாளர்கள் என்று சொல்லவே அச்சப்படும் நிலை இருந்தது. பத்திரிகையாளர்களின் குரல்வளை நெறிக்கப்பட்டு அல்லல்படும் நிலை இருந்தது. பல பத்திரிகையாளர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டன. இந்நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு முதல் நடவடிக்கையாக பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்தது. இடர்பாடு காலங்களில் பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கு அவர்களுக்கான நிவாரணம் அறிவிக்கப்பட்டதோடு கரோனா பாதிப்பால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையை வழங்கி பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.
தொடர் நடவடிக்கையாக பத்திரிகை துறையில் உள்ள அனைவருக்கும் அரசின் அனைத்து திட்டங்களும் சேர வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் பத்திரிகையாளர்களின் தேவைகள் குறித்து அறிய செய்தித்துறை அமைச்சரை பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகளிடம் நேரில் பேசி அறிந்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு செயல்படுத்தி வருகிறார்.
நாட்டின் நான்காவது தூணாகிய பத்திரிகைத் துறையில் பணியாற்றுபவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று வாக்களித்ததோடு நில்லாமல் செயலில் இறங்கிய முதலமைச்சர் அவர்களுக்கு பத்திரிகையாளர்கள் சார்பில் தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு நலசங்கம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு பத்திரிகையாளர்களின் நலனுக்காக எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உரிய ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் உறுதியளிக்கிறது.
தந்தையின் வழியில் பத்திரிகையாளர்களை தமது உறவாகக் கருதி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக்கு பெரும் ஆதரவாக தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் இருக்கும் என்றும் உறுதியளிக்கிறது.
கு.அழகியநம்பி மிதார் மைதீன்
தலைவர் செயலர்