நாகப்பட்டினம் அண்ணாசிலை, புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதிகளில் 4 வயது சிறுவன் தனது தந்தையுடன் பிச்சை எடுப்பதாக நாகை அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசாரை கண்டவுடன் சிறுவனை அங்கேயே விட்டு தந்தை ஓடிவிட்டார். உடனே போலீசார் அந்த சிறுவனை மீட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது போலீசார் விசாரணை நடத்திய போது சிறுவன் கூறியதாவது:-
திட்டச்சேரி அருகே பொரக்குடி என்றும் தந்தை ஷாஜகான், தாய் நூர்ஜகான் என்று அந்த சிறுவன் கூறினார். மேலும் தாய் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் தந்தையுடன் சேர்ந்து நாகையில் பல்வேறு இடங்களில் பிச்சை எடுப்பதாகவும் அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு இரவு நேரங்களில் தந்தை மது அருந்துவதாகவும் அந்த சிறுவன் கூறினார். இதன்பின்னர் போலீசார் அந்த சிறுவனுக்கு தேவையான உணவு, உடைகளை வாங்கி கொடுத்து குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைத்தனர்.
நாகை செய்தியாளர்:ச. ராஜேஷ்