நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று ஆக்சிஜன் கசிவால் பரிதாபமாக உயிழந்த ராஜேஷூன் மனைவி சுபாஷினி மற்றும் இரு பெண் குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்கு உதவி கேட்டு கலெக்டர் அருண்தம்புராஜூடம் கோரிக்கை மனு வழங்கினர்.
அந்த மனுவில்கூறியிருப்பதாவது:
நாகையை அடுத்த நாகூர் பெருமாள் கீழவீதியை சேர்ந்த ராஜேஷ் (வயது38). தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 12ம் தேதி நாகை மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 23-ம் தேதி இரவு மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயில் கசிவு ஏற்பட்டதால் கொரோனா வார்டில் இருந்த கொரோனா தொற்றாளர்களை மருத்துவ பணியாளர்கள் மற்றொரு வார்டுக்கு இடமாற்றம் செய்தனர். அப்போது ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டதால் ராஜேஷூக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.நாகை அரசு மருத்துவ பணியாளர்களின் அலட்சிய போக்கால் தான் எனது கணவர் ராஜேஷ் பலியாகி விட்டார். குடும்பத்தலைவரை இழந்த நானும் எனது இரு பெண் குழந்தைகளும் அனாதையாக நிற்கிறோம்.
இந்த சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையமும் விளக்கம் கேட்டுள்ளது. எனவே இரு பெண் குழந்தைகளின் வாழ்வாதாரம் கருதி முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு எனது வேண்டுதலை பரிந்துரை செய்திட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
நாகை செய்தியாளர் : ச.ராஜேஷ்