கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா விதிகளை மீறியதாக 4 மாதங்களில் 18 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி சார்பாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும், அந்தந்த உதவி ஆணையர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, முகக்கவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200, சமூக இடைவெளி பின்பற்றாத கடைகளுக்கு ரூ.500 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடும் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இருந்து ஜூலை 31ம் தேதி வரை கடந்த 4 மாதங்களில் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டதாக 5 மண்டலங்களிலும் 18 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளி மீறியதாக கடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து மட்டும் 4 மாதங்களில் ரூ.2.70 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது,’ என்று தெரிவித்தார்.
செய்திகள் : கார்த்திக் பாலாஜி, கோவை