நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனவும் போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்தும், அழகி போட்டிகளில் பங்கெடுத்தும் அறியப்பட்டவர் மீரா மிதுன். சர்ச்சையான கருத்துக்கள் கூறுவதும், நடிகர் நடிகைகள் பற்றி அவதூறு கூறுவதும், அதனால் காவல் நிலையங்களில் பல வழக்குகள் பதியப்பட்டு இருப்பதும் இவருக்கு புதியதல்ல.
இந்த நிலையில் நடிகை மீரா மிதுன் சில தினங்களுக்கு முன் வெளியிட்டார். அதில், குறிப்பிட்ட சமூகப் பிரிவினரை குறிவைத்து அந்தப் பிரிவைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர், நடிகைகளை குறித்து கொச்சையாகப் பேசியும், அவர்களை திரைத்துறையில் இருந்து அகற்றுவது அவசியம் எனவும் பேசியிருந்தார்.
மேலும், அப்பிரிவைச் சேர்ந்த அனைவரும் குற்றப் பின்னணி உடையவர்களாக இருப்பதால்தான் அவர்களை அனைவரும் தூற்றுகின்றனர் எனவும் அவர் பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.நடிகை மீரா மிதுனின் இப்பதிவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் கிளம்பிய நிலையில், பல்வேறு கட்சியினர் மற்றும் அரசியல் சாரா இயக்கங்கள் தமிழகத்தின் பல காவல் நிலையங்களில் மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருந்தனர்.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு – சைபர் கிரைம் போலீசார் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகம் செய்ய தூண்டிவிடுதல், சாதி மதம் குறித்துப் பேசி கலகம் செய்ய முயற்சித்தல் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு நடிகர் விஜய் அவரது மனைவி சங்கீதா, நடிகர் சூர்யா உள்ளிட்ட திரை பிரபலங்களை அவதூறாக பேசியதற்காக அவர்களின் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் உள்ள பல காவல் நிலையங்களில் புகார் கொடுத்தனர். அந்த வகையில் சென்னை எம்.கே.பி காவல்துறையினர் மீரா மிதுன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ததும், அதே போல சமூக வலைதளங்களில் தனிநபர் தாக்குதல் நடத்தியதாக கேரளாவில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதும், கடந்த 2019ஆம் ஆண்டு எழும்பூர் போலீசார் மீராமிதுன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது சாதிய ரீlதியாக பேசி வீடியோ வெளியிட்டதால் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனவும் போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.