நமது இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில், 75-வது சுதந்திர தின விழாவை பசுமை விழாவாக கொண்டாடினர். 75-வது சுதந்திர தினத்தை நினைவுபடுத்தும் வகையில் 75 அடி நீளத்திற்கு இந்திய வரைபடத்தை வரைந்து அதனுள் 1500 மரக்கன்றுகளை வைத்து இந்திய வரைபடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இங்கு வைக்கப்பட்டிருக்கும் மரக்கன்றுகள் அரசு அலுவலகங்கள் அரசு பள்ளிகளில் வைத்து பராமரிக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக இன்று மட்டும் 750 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. மரங்களை நடுவதோடு மட்டும் இன்றி அந்த மரங்களை சுற்றி வேலி அமைத்தால் மற்றும் அந்த மரக்கன்றுகளுக்கான பராமரிப்பு பணிகளையும் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்களே மேற்கொள்ளும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தேசப்பற்றோடு இணையும் அனைவரும் சமூகப்பற்றையும் வளர்த்து கொள்ள வேண்டும், இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 75-வது சுதந்திர தின விழா பசுமை விழாவாக கொண்டாடப் பட்டது என்று தெரிவித்துள்ளனர். இந்திய வரைபடம் பசுமையாக காட்சியளித்தது காண்போரை கண்கவர செய்தது. மேலும் இந்நிகழ்வில் தென்காசி மாவட்ட கல்வி அலுவலர், சிவகங்கை மாவட்ட ஏடிஎஸ்பி இராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர.
கொரோனா பரவல் காரணமாக கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு மாணவர்கள் இன்றி சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
மேலும் சுதந்திர தினத்திற்காக தொடங்கப்பட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இனி வரும் காலங்களிலும் மாணவர்கள் தொடர்ந்து ஈடுபடுவார்கள் என்று பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.