செய்திகள்

கண்மாய்மடையில் துண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு : கி.பி 9ம் , 13ம் மற்றும் 16ம் நூற்றாண்டு கட்வெட்டுகள்

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே வில்லூர் பெரிய கண்மாய் மடையில் கி.பி.9 ,13, மற்றும் 16ம் நூற்றாண்டை சேர்ந்த வெவ்வேறு காலக்கட்டத்தை கொண்ட துண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி இருந்து கள்ளிக்குடி செல்லும் வழியில் உள்ள வில்லூரில் மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து. முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் லெட்சுமண மூர்த்தி, அஸ்வத்தாமன் நாகபாண்டி, பழனிமுருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் அப்பகுதியை மேற்பரப்பு கள ஆய்வு செய்தபோது பெரிய கண்மாய் மடை பகுதியில் வெவ்வேறு காலக்கட்டத்தை சேர்ந்த துண்டு கல்வெட்டு கண்டறியப்பட்டது.

இது குறித்து பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளர் முனைவர் து முனீஸ்வரன் கூறியதாவது ;-

வேளாண்மையில் செழிப்பான பகுதியாக விளங்கிய இவ்வூரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பெரிய கண்மாயில் நீர் வெளியேற மூன்று கண் மடை அமைந்துள்ளது. முதல் கண்ணின் சுவர் பக்கவாட்டியில் 1 அடி நீளம் ½ அடி அகலம் கொண்ட ஒரு கல்லில் 6 வரிகள் கொண்ட கி.பி. 9 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டும், இரண்டாவது கண்ணில் சுவரின் உட்புறமாக சொருகப்பட்ட நிலையில் 3 வரி கொண்ட கி.பி. 13 ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டும் உள்ளன. இக்கல்வெட்டு நீர் வழிந்தோடும் இடத்தில் இருப்பதால் பல சொற்கள் அழிந்த நிலையில் உள்ளதால் சொற்களின் பொருள் அறிய முடியவில்லை.

கி.பி. 16 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு செய்தி :

பெரிய கண்மாய் மூன்றாவது கண் மடையில் வலது புற சுவரின் 1 அடி அகலம், 3 அடி நீளம் கொண்ட ஒரே கல்லில் 11 வரிகள் கொண்ட கி.பி. 16 ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டில் சகல குரு நாயனே, சகல குரு பாதமே, சகல விஷமும் தீரும் எங்கே விஷந்தீண்டினாலும் நன் என்ற வரி பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டினை படியெடுத்து தமிழக தொல்லியல் துறையில் இருந்து ஒய்வு பெற்ற முனைவர் சொ.சாந்தலிங்கம் உதவியுடன் ஆய்வு செய்தபோது எங்கே விஷம் தீண்டினாலும் குருவோடு குருவின் பாதம் பணிந்தால் விஷத்தன்மை முற்றிலும் நீங்கி விடும். இக்கல்வெட்டினை வேற பகுதியில் இருந்து எடுத்து வந்து பெரிய கண்மாய் கண் மடை கட்டப்பட்டு இருக்கலாம் என்றார் .

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button