நாகை மாவட்டம் நாகூர் அடுத்துள்ள பெரியகண்ணமங்கலம் ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த நீலமேகம் என்பவரது மகள் நளினிக்கும்(30), வலிவலம் அருகே இறையான்குடியை சேர்ந்த நடராஜன்(33) என்பவருக்கும் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நளினி தனது கணவர் நடராஜனுடன் கோபித்து கொண்டு கடந்த 8 மாதங்களுக்கு தந்தை வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று நடராஜன் தனது மனைவி நளினி மற்றும் குழந்தைகளுடன் சமாதானம் பேசி தனது வீட்டிற்கு அழைத்து செல்ல மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மனைவியை நடராஜன் தனது வீட்டிற்கு அழைத்து செல்ல முயன்றபோது, தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த நடராஜன் தனது மாமனார் நீலமேகத்தை அங்கிருந்த கட்டையால் அடித்து அரிவாளால் வெட்டியுள்ளார். அப்போது ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த நீலமேகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலிசார் கொலை செய்த நடராஜனை கைது செய்தனர். நாகை அருகே மாமனாரை மருமகனே வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : ராஜேஷ், நாகை