எந்த வழக்கிலும் சிக்காமல், நீதிமன்றம் செல்லாமல் சிறையில் கைதியாக கம்பி எண்ணும் அனுபவத்தை பெற விருப்பம் உள்ளதா? அப்படியென்றால் உங்களுக்காகவே இந்த திட்டத்தை கர்நாடக சிறைத்துறை முன்னெடுத்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் ஹிண்டல்கா சிறை உள்ளது. இந்த சிறையில் விசாரணை கைதிகள், ஆயுள் தண்டனை கைதிகள் என 500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறையில் தான் ரூ.500 கட்டணம் செலுத்தினால் ஒரு நாள் முழுவதும் கைதியாக வாழும் திட்டத்தை அதிகாரிகள் அமல்படுத்த உள்ளனர்.
கைதியின் வாழ்வில் ஒரு நாள்’ என்ற கருத்தை முன்வைத்து, 24 மணிநேரத்திற்கு சாமானியர்கள் ஒரு கைதியின் வாழ்க்கையை வாழ அனுமதிக்கும் விதமாக இந்த புதிய முயற்சியை கர்நாடக சிறைத்துறையினர் முன்னெடுத்துள்ளனர். இப்போது இந்த முயற்சியை செயல்படுத்த அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறார்கள்.
இதற்காக சிறைக்கு வரும் பார்வையாளர்கள் மற்ற கைதிகளைப் போலவே நடத்தப்படுவார்கள் என்று சிறை அதிகாரிகள் கூறுகின்றனர். கைதிகளை போலவே சிறை சீருடை அணிவது, கைதி எண்ணைப் பெறுவது, சிறையை பகிர்ந்து கொள்வது, சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் அதே உணவைச் சாப்பிடுவது மற்றும் கைதிகள் மேற்கொள்ளும் தோட்டக்கலை, சமையல் மற்றும் சுத்தம் செய்தல் போன்ற பணிகளை செய்தல் உள்ளிட்டவற்றையும் மேற்கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு எந்த சலுகைகையும் அளிக்கப்படாது என்கின்றனர். அன்றைய பணிகளை முடித்த பிறகு, சிறை சுற்றுலா வந்த பார்வையாளர்கள் மற்ற கைதிகளுடன் தரையில் தூங்க வேண்டும் என்கின்றனர்.
மேலும், கைதிகளின் வாழ்க்கை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கிலே இதுபோன்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக சிறைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.