செய்திகள்

மதுரையில் ஆவின் பாலை புறக்கணிக்க தயாராகும் மக்கள். தடுக்குமா தமிழக அரசு..? பால் முகவர்களுக்கு ஆவின் நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்குமா..?

மதுரை ஆவின் ஊழல் முறைகேடுகளுக்கு மட்டுமல்ல அங்கே தரமற்ற பாலை உற்பத்தி செய்து, குளிர்நிலை சரியாக பராமரிக்கப்படாமல் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுவதால் பால் பாக்கெட்டுகள் தொடர்ந்து கெட்டுப் போவதால் அதிலும் மதுரை ஆவின் நிர்வாகம் முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி மதுரையில் பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட சுமார் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசும்பால் பாக்கெட்டுகள் குளிர்நிலை சரியில்லாத காரணத்தாலும், தரத்தை கண்காணிக்காமல் பால் பண்ணையில் இருந்து பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டதாலும் அவை கெட்டுப் போன நிலையில் நேற்றும் (21.08.2021) இன்றும் (22.08.2021) பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான ஆவின் பசும்பால் பாக்கெட்டுகள் மீண்டும் கெட்டுப் போயிருக்கிறது.

நேற்று (21.08.2021) காலை ஆவின் பசும் பால் பாக்கெட்டுகளை பால் முகவர்களிடம் இருந்து வாங்கிச் சென்ற வாடிக்கையாளர்கள் பால் கெட்டுப் போனதால் அதனை உடனடியாக மாற்றித் தரக் கோரி பால் முகவர்களிடம் சண்டையிட்டுள்ளனர். அத்துடன் இனிமேல் எங்களுக்கு ஆவின் பால் வேண்டாம் எனவும், மாதாந்திர அட்டைக்கு செலுத்திய முன்பணத்தை திரும்பி தருமாறும் கூறி சண்டையிட்ட நிகழ்வு மதுரை மாநகர் முழுவதும் அரங்கேறியுள்ளது.

மேலும் இந்நிலையில் இன்றும் (22.08.2021) பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பசும் பால் பாக்கெட்டுகள் காலையிலேயே கெட்டுப் போனதாக கூறி பால் வாங்கிச் சென்ற வாடிக்கையாளர்கள் கெட்டுப் போன பாலினை காய்ச்சிய பால் சட்டியோடு கொண்டு வந்து மாற்றித் தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் ஆவின் பசும் பால் பாக்கெட்டுகள் வாங்கிச் சென்று பால் கெட்டுப் போன நுகர்வோருக்கு அதனை மாற்றித் தர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதால் பால் முகவர்களுக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. அது தொடர்பாக மதுரை ஆவின் அதிகாரிகள் கவனத்திற்கு நேற்றைய (21.08.2021) தினமே கொண்டு சென்றும் அவர்கள் பால் முகவர்களின் புகாருக்கு செவிமடுப்பதாக இல்லை. பால் முகவர்களுக்கு கெட்டுப் போன பாலுக்குரிய இழப்பீடை வழங்குவதாகவும் இல்லை.

ஆவின் நிர்வாகம் பால் கெட்டுப் போனதற்குரிய இழப்பை ஈடுசெய்ய முன்வராததாலும், மதுரையில் தொடர்ந்து ஆவின் பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போவதாலும் “பெரும்பாலான நுகர்வோர் ஆவின் பாலே இனிமேல் வேண்டாம்” என புறக்கணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதன் காரணமாக பால் முகவர்களும் ஆவின் பால் விற்பனையை புறக்கணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

எனவே தரமற்ற, குளிர் நிலை சரியாக பராமரிக்கப்படாமல் இருந்ததோடு, பால் கெட்டுப் போக காரணமாக மெத்தனமாக இருந்து ஆவின் பால் விநியோகம் செய்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிமேல் இது போன்று நிகழாவண்ணம் துரிதமாக செயல்படவும், கெட்டுப் போன ஆவின் பாலுக்குரிய இழப்பீடை பால் முகவர்களுக்கு ஆவின் நிர்வாகம் தாமதமின்றி வழங்கிடவும் ஆவின் நிர்வாகத்திற்கு தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button