சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் வள்ளுவர் நகரில் டீக்கடை உள்ளது. இரவு நேரத்தில் டீ கடைக்கு சென்ற மூன்று நபர்கள் பஜ்ஜி மற்றும் ஜூஸ் வாங்கியுள்ளனர். ஜூஸோடு சேர்த்து மது கலந்து கடையினுள் அமர்ந்து மூவரும் மது அருந்தியதால் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் இங்கு அமர்ந்து மது அருந்த வேண்டாம் என கூறியுள்ளனர்.
அப்போது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கடை ஊழியர்களை மிரட்டிவிட்டு மூவரும் அங்கிருந்து பணம் கொடுக்காமல் செல்ல முயன்றனர்.
பணம் கொடுக்கும்படி அவர்களிடம் கேட்டபோது வாகனத்தில் தப்பி செல்ல முயன்றதால் இருசக்கர வாகன சாவியை கடை ஊழியர்கள் எடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த மூன்று நபர்களும் கடை ஊழியர்களை அடித்து தகராறில் ஈடுபட்டனர்.
கடை ஊழியர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
டீ கடை ஊழியர்களை தாக்கிய மூவரும் தப்பியோடிய நிலையில் பாதிக்கப்பட்ட வட மாநில இளைஞர்கள் கொடுத்த புகாரின் பேரில் பெரும்பாக்கம் போலீசார் பொன்மார் பகுதி மலைத்தெருவை சேர்ந்த நாகூர் மீரான்(24), அஜித்குமார்(18), மற்றும் ஒரு சிறார் உட்பட மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.