ஆண்டு தோறும் இந்து முன்னணியின் சார்பில் நடைபெற்று வந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மிக பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு மூன்று நாட்கள் வழிபாடு நடத்திய பின்னர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடல் மற்றும் ஆறு, குளங்களில் கரைப்பது வழக்கமாக இருந்து வந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டும் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு தடை விதித்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதித்தது இந்துக்களுக்கு எதிரானது என்றும் அரசின் இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டியும் தமிழகமெங்கும் உள்ள கோவில்களில் உள்ள தெய்வ சிலைகளிடம் இந்து முன்னியினர் மனு கொடுத்து முறையிடப்போவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து தூத்துக்குடி சிவன் கோவிலில் உள்ள விநாயகர் சிலை முன்பு தூத்துக்குடி மாவட்ட இந்து முன்னணி செயலாளர் ராகவேந்திரா தலைமையில் இந்து முன்னணி தொண்டர்கள் ஒன்றினைந்து விநாயகர் சிலையிடம் மனு அளித்து முறையீடு செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணியினர் கலந்து கொண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்த ஆட்சியாளர்களின் மனதில் மாற்றத்தை ஏறபடுத்தி விழா சிறப்புடன் நடைபெற விநாயகர் அருள் புரிய வேண்டுமென முறையிட்டனர்.