தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக கூறப்படும் நிலையில் நேற்று முன்தினம் (1ம் தேதி) முதல், 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
மாணவர்கள் நலன் கருதி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், பள்ளிகளில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பள்ளி நிர்வாகம் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஒரு வகுப்பில் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். ஒரு பெஞ்சின் ஒரு முனையில் ஒரு மாணவர், மறு முனையில் மற்றொரு மாணவர் என சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும்.
கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்துடன், பெற்றோர் அச்சமின்றி மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். பள்ளிக்கு வர விரும்பாத மாணவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் முலம் கல்வி கற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாமக்கல் மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து அந்த மாணவி தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசோதனை நடைபெற்று வருகிறது.
பள்ளிகள் திறக்கப்பட்ட 3 வது நாளில் மாணவிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட சம்பவம் பெற்றோர் மற்றும் பொதுமக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் அரியலூரில் இருவேறு பள்ளிகளை சேர்ந்த 2 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.. 9-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும், 12-வகுப்பு மாணவி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.. அந்த மாணவிகள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மற்ற மாணவிகளுக்கு ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.. இந்த முடிவுகள் வெளியானால் தான் எத்தனை பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது என்பது தெரியவரும்.