தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலைகள் தோண்டப்பட்டு புதிதாக சிமெண்ட் தளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஸ்மார்ட்சிட்டி பணிகளால் சாலைகள் குண்டும் குழியுமாக தோண்டப்பட்டு கிடப்பதாகவும், பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை கட்சி தொண்டர்கள் இன்று முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்புச் செயலாளர் ஹென்றி தாமஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் ஸ்மார்ட்சிட்டி திட்டம் என்ற பெயரில் சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக போடப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் 3 பிரதான சாலைகளும் தோண்டப்பட்டு போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் பல இடங்களில் விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன. மேலும் சாலைகள் தோண்டப்படுவதால் தண்ணீர் இணைப்பு குழாய்கள் பல இடங்களில் உடைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் விரைவில் மழைக்காலம் தொடங்கி இருப்பதனால் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும். இன்னமும் பல இடங்களில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கினால் அதை வெளியேற்றுவதற்கு மோட்டார் பொருத்தும் பணி மட்டுமே நிறைவு பெற்றிருக்கிறது. தவிர அதற்கு நிரந்தர தீர்வாக செய்ய வேண்டிய பணிகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே மாநகராட்சி ஆணையர் மாநகராட்சியின் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அங்கு மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக செலவு செய்து வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மாநகராட்சியில் முழுவதிலும் சாலை பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு சீரமைக்கப்பட வேண்டும் என்றார்.