டோக்கியோ பாராலிம்பிக் தொடரில், வரலாறு காணத பதக்க மழையை பொழிந்து வருகிறது இந்தியா. 2 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என 13 பதக்கங்கள் வென்றுள்ள இந்தியாவுக்கு, இன்று காலை பேட்மிண்டன் விளையாட்டில் இரண்டு பதக்கம் உறுதியானது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பாரா துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் மணிஷ் நார்வால் தங்கமும், சிங்ராஜ் வெள்ளிப்பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர். இந்தியாவின் பதக்க எண்ணிக்கை இப்போது 15-ஆக உயர்ந்துள்ளது.
பாராலிம்பிக் போட்டிகளை பொருத்தவரை, உலகெங்கிலும் இருந்து வெவ்வேறு பாதிப்புகளுடன் வீரர், வீராங்கனைகள் போட்டியிடுவர். அவர்களது, உடல் பாதிப்புகள் ஒருவரை ஒருவரிடம் இருந்து வித்தியாசப்பட்டிருக்கும். இதனால், ஒரு விளையாட்டில் வெறும் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளின் கீழ் பிரிக்காமல், வெவ்வேறு பாதிப்புகளைப் பொருத்து பிரிவுகள் பிரிக்கப்படும். அந்த பிரிவுகளின்கீழ் வீரர் வீராங்கனைகள் போட்டியிடுவர். ஒரே விளையாட்டின் கீழ் பிரிக்கப்படும் பிரிவுகளை சில குறியீடுகளை கொண்டு அடையாளப்படுத்துவர். அந்த வரிசையில், கலப்பு பிரிவு பாரா துப்பாக்கிச் சுடுதல் 50 மீ எஸ்.எச் 1 பிரிவில் இந்தியாவின் சிங் ராஜ் மற்றும் மணிஷ் நார்வால் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த போட்டியில், 218.2 புள்ளிகளுடன் மணிஷ் முதல் இடத்திலும், 216.7 புள்ளிகளுடன் சிங்ராஜ் இரண்டாம் இடத்திலும் நிறைவு செய்தனர். ஏற்கனவே, ஆண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் எஸ்.எச்.1 பிரிவில் 216.8 புள்ளிகள் பெற்று சிங்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
இந்தியாவின் அவானி லெகாராவைத் தொடர்ந்து, ஒரே பாராலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார் சிங்ராஜ். ஒரே போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்திய வீரர்களில் மணிஷ் நார்வாலுக்கு வயது 19, சிங்ராஜூக்கு வயது 39! 20 வருட வயது வித்தியாசம் இருந்தும் போட்டி முடிந்தபின் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி உற்சாகப்படுத்திக் கொண்ட தருணம், பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கான ஆகச்சிறந்த தருணங்களில் ஒன்றாகும்!