சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக தனது முதல் வாக்குறுதியாக ‘திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து’ ‘முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து’ என்று பிரச்சாரம் செய்து; வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் முடிந்த நிலையில், தற்போது வரை நீட் தேர்வு ரத்து செய்வதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக இன்று தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர். திமுக தேர்தல் வாக்குறுதி பொய்த்துப்போனது.
இந்நிலையில், நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் இன்று அதிகாலை மேலும் ஒரு உயிர் பலியாகி உள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கூளையூரை சேர்ந்தவர் சிவகுமார். இவர் விவசாய பணி செய்து வருகிறார்.
இவருக்கு இரண்டு மகன்கள், இவரின் இரண்டாவது மகன் தனுஷ். வயது பத்தொன்பது ஆகிறது. இவர் தனியார் பள்ளியில் பள்ளியில் கடந்த 2019ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு முடித்தார். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண்களை பெற்றிருந்த தனுஷ், மருத்துவராக வேண்டும் என்ற கனவில் கடந்த இரண்டு வருடங்களாக நீர் தேர்வு எழுதியுள்ளார்.
இந்த இரண்டு முறையும் மாணவன் தனுஷ் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில் இன்று மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுத மாணவன் தனுஷ் தயாராக இருந்த நிலையில், வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
முன்னதாக முதல் நாள் தனது நண்பர்களிடம், நான் இந்த முறையும் நீட் தேர்வில் தேர்ச்சி ஆகவில்லை என்றால் என்னுடைய மருத்துவர் கனவு, கனவாகவே போய்விடும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்