கடந்த சில நாட்களுக்கு முன் ஆஸ்திரேலியா (Australia), அமெரிக்கா (America) மற்றும் இங்கிலாந்து (UK) ஆகிய மூன்று நாடுகளும் ஆக்கஸ் (AUKUS) என்ற புதிய அமைப்பை அமைத்தன.
இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் (China) செல்வாக்கிற்கு எதிராக ஒன்றிணைந்து பாதுகாப்பிற்காக இந்த உடன்படிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் முதல் முயற்சியாக அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா வாங்க உள்ளது.
இந்நிலையில், இதற்கு முன்னரே ஆஸ்திரேலியா, பிரான்சிடம் டீசல் நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்காக ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளது. அதன்படி கப்பல்களின் பணி பாதி முடிவடைந்த நிலையில், ஆக்கஸ் உடன்படிக்கை காரணமாக பிரான்சிடம் போட்டிருந்த ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்தது.
இதனால் கடுப்பான பிரான்ஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை உலக நாடுகளையே திரும்பி பார்க்க செய்துள்ளது.
ஆக்கஸ் உடன்படிக்கையில் இருக்கும் அமெரிக்காவும் பிரான்ஸும் பல ஆண்டுகளாக நெருங்கிய நட்பு நாடாக இருந்து வருகிறது. ஆனால், இந்த ஆக்கஸ் அமைப்பில் அமெரிக்கா பிரான்ஸை தவிர்த்துவிட்டு புதிய அமைப்பை உருவாக்கியது.
அதுமட்டுமல்லாமல், இந்த ஒப்பந்ததால் ஆஸ்திரேலியா போட்டிருந்த பல்லாயிரக்கணக்கான கப்பல் பணி ஒப்பந்தமும் ரத்து ஆகியது.
இதுகுறித்து பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன் யெவ்ஸ் லே டிரியன் நேற்று (18-09-2021) கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஆஸ்திரேலியா எங்கள் நாட்டுடனான வர்த்தக உறவை முறித்து கொண்டு, எங்களின் பாரம்பரிய நட்பு நாடான அமெரிக்காவுடன் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் தொழில்நுட்பம் பெறுவதற்காக கைகோர்த்துள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் இந்த செயல் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. இதனால், அந்நாடுகளில் இருக்கும் தூதர்களையும் திரும்ப அழைத்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,’ என கூறியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் இந்த அறிவிப்பு அமெரிக்கா மற்றும் ஆஸ்திரலேயா மட்டுமல்லாமல் உலக நாடுகளில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சின் இந்த அதிரடி முடிவை குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் எமிலி ஹார்ன் கூறும்போது, ‘பிரான்ஸ் அமெரிக்காவின் நட்பு நாடு. இப்போது பிரான்ஸ் தங்கள் தூதரை திரும்ப அழைத்துக் கொண்டது பற்றி பிரான்ஸ் அரசுடன் அமெரிக்கா பேசி வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சகமும், ‘நாங்கள் போட்டுக்கொண்ட இந்த ஆக்கஸ் உடன்படிக்கை மூலம் பிரான்சுக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றத்தை புரிந்து கொள்கிறோம். இந்த அமெரிக்கா உடனான ஒப்பந்தம், எங்களின் தேசிய பாதுகாப்பு நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு’ என அறிவித்துள்ளது.