தூத்துக்குடியில் காவல்துறையினர் விடிய விடிய தீவிர ரோந்து : 47 ரவுடிகள் சிக்கினர் – ஆயுதங்கள் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் நேற்று இரவு விடிய விடிய தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதில் 47 ரவுடிகள் பிடிக்கப்பட்டு 42 அரிவாள், வாள் போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேற்று (23.09.2021) இரவு மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை செய்யவும், தங்கும் விடுதிகளில் குற்றவாளிகள் மற்றும் சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கியுள்ளனரா என சோதனையிடவும், கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை தணிக்கை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும்,
வங்கிகள், ஏடிஎம் மையங்கள், நிதி நிறுவனங்கள், நகைக்கடைகள் உட்பட முக்கிய இடங்களை கண்காணிக்கவும், பழைய ரவுடிகளை தணிக்கை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளை கைது செய்தல் போன்ற பல்வேறு தீவிர ரோந்துப் பணிகளை (Strorming Operation) மேற்கொள்ள மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன் பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் இரவு முழுவதும் விடிய, விடிய தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது. அதில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 47 ரவுடிகள் பிடிக்கப்பட்டு, 42 அரிவாள், வாள் போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது தவிர பழைய வழக்குகளில் ஈடுபட்டுள்ளவர்கள் 103 பேர் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 107, 109 மற்றும் 110 ஆகிய பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள் சோதனையிடப்பட்டுள்ளது, வாகன சோதனையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சோதனையிடப்பட்டு மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியதாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வங்கிகள், நிதிநிறுவனங்கள், ஏடிஎம் மையங்கள், நகைக்கடைகள் உட்பட முக்கிய இடங்களை கண்காணிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டு பல்வேறு நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி மாவட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார். இந்த தீவிரப்பணி தொடர்ந்து நடைபெறும் எனவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.