வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த குலாப் புயல் கலிங்கப்பட்டினம் – கோபால்பூர் இடையே கரையை கடந்தது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா இடையே ‘குலாப்’ புயல் கரையைக் கடந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, கலிங்கப்பட்டினம் – கோபால்பூர் இடையே புயல் கரையை கடந்தது. இதன் காரணமாக ஏற்கனவே ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு, அதீத கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது..
அங்கு காற்றுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில், குலாப் புயல் கரையைக் கடந்து உள்ளது. குலாப் புயல் கரையை கடந்த போது 75 – 85 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் நேற்று கனமழை பெய்தது.மழையின்போது பலத்த காற்று வீசியதால் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் அப்பகுதிகளில் வசிப்போர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாயினர்.