திருச்செந்தூர் அருகிலுள்ள வேப்பங்காட்டில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் அரிவாளுடன் மோதிக்கொண்ட காட்சிகள் வெளியாகி அதிரிச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற்றது.இந்த தேர்தலின் போது திருச்சபை பணியாளர் சுந்தர் என்பவர் ஒரு தரப்பினர்க்கு ஆதரவாகவும் ஞானய்யா என்பவர் ஒரு தரப்பினருக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தேர்தல் பிரச்சனை தொடர்பாக திருச்செந்தூர் அருகிலுள்ள
வேப்பங்காடு ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த ஞானையா என்பவர் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் ஊழியராக பணியாற்றிவரும் சுந்தரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதே ஊரைச் சேர்ந்த சுந்தரின் ஆதரவாளர்களான ஜெபசிங்(29) உள்ளிட்ட சிலர் ஞானையாவிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஞானையா மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜெபசிங்கை வெட்ட முயன்றுள்ளார். தடுக்க முயன்ற ஜெபசிங், அவரது தங்கை அபிசா(20) ஆகிய இருவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த இருவரும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த மோதலை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தற்போது இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் தொடர்பாக இருதரப்பினர் அளித்த புகாரின்பேரில் இருதரப்பைச் சேர்நத 5- பேர் மீது மெஞ்ஞானபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.