வங்கி மற்றும் சுற்றுலா பயணிகளிடம் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டி விட்டு, தனியார் லாட்ஜில் தங்கியிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக சில தங்கியிருப்பதாக கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் அங்கு சென்ற போலீசார் சம்பந்தப்பட்ட லாட்ஜில் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த லாட்ஜ் அறையில் இருந்த 6 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த ஆலன் என்ற வினு (23), ரோஷன் (19), சுசீந்திரம் பரப்புவிளையை சேர்ந்த சஞ்சய் (20) என்பதும் மற்ற மூன்று பேர் சுசீந்திரம், ஆசிரமம், மயிலாடி மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 17, 18 வயது நிரம்பிய சிறுவர்கள் என்பதும் தெரியவந்தது.
இவர்கள் 6 பேரும் வங்கி மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளிடம் கொள்ளை அடிப்பது தொடர்பாக சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்து அவரிடம் இருந்த கத்தி, மிளகாய் பொடி உள்ளிட்டவர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.