சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூபாய் 3லட்சத்திற்கு விற்பனை செய்த 9 மாத ஆண் குழந்தை மீட்பு – குழந்தையை விலைக்கு வாங்கிய 3 பேர் கைது – கைது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (38) என்பவருக்கும், தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைகுட்பட்ட கொத்தனார் காலனி பகுதியை ஜெபமலர் (28) என்பவருக்கும் கடந்த 2019 ஆண்டு திருமணம் ஆகியுள்ளது. தற்போது இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். இந்நிலையில மேற்படி ஜெபமலருக்கு அடுத்து திருமணம் செய்ய அவரது குடும்பத்தார் முடிவெடுத்துள்ளனர். அதனால் திருமணத்திற்கு தடை ஏற்படும் என்பதால் ஜெபமலரின் 9 மாத ஆண் குழந்தை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 23.09.2021 அன்று ஜெபமலர் தனது சகோதரர் அந்தோணி, ஜெபமலர் தாயார் கிருபா, தந்தை செல்வராஜ், மாமா டேனியல் ஆகியோர் புரோக்கர்கர்களான ஜேசுதாஸ், கார்த்திகேயன் ஆகியோரை தொடர்பு கொண்டு கணவர் மணிகண்டனுக்கு தெரியாமல், தனது 9 மாத ஆண் குழந்தையை ரூபாய் 3 லட்சத்திற்காக 24.09.2021 அன்று விற்பனை செய்துள்ளனர். இதனையறிந்த மணிகண்டன் கடந்த 28.09.2021 அன்று தனது குழந்தையை மீட்டு தருமாறு அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சண்முகம் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. சங்கர், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. நம்பிராஜன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து குழந்தையை மீட்டு, சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு ஜெபமலரிடம் குழந்தையை பணம் கொடுத்து விலைக்கு வாங்கிய கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மேலசூரங்குடி பகுதியை சேர்ந்த ஹரிசந்திரன் மகன் செல்வமணி (52) அவரது மனைவி ஸ்ரீதேவி (40) மற்றும் அதற்கு உதவியாக இருந்த ராஜபாளையம் ரெட்டியார்பட்டியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் கார்த்திகேயன் (30) ஆகிய 3 பேரையும் கைது செய்து 9 மாத ஆண் குழந்தையை மீட்டனர்.
மேலும் குழந்தையை விற்பனை செய்த எதிரிகளான ஜெபமலர், அந்தோணி, கிருபா, செல்வராஜ், டேனியல், புரோக்கர் ஜேசுதாஸ் மற்றும் இதில் சம்மந்தப்பட்ட எதிரிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வருகினற்னர்.