இந்தாண்டு நடந்த ஒலிம்பிக் மற்றும் பாராஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை குவித்தனர்.
அவர்களுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்தது. பிரதமர் மோடி தொலைபேசியிலும், நேரிலும் அழைத்து பேசினார்.
ஆனால், கடந்த பாராஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரருக்கு 5 ஆண்டுகள் கடந்தும் அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை கிடைக்காமல் அடுத்த பயிற்சிக்கு நிதி இல்லாமல் தவித்து வருகிறார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த ரியோ பாராஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெண்கல பதக்கம் வென்றவர் இந்தியாவின் வருண் சிங் பாட்டி. இவர் இந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டியில் 6ஆவது இடம் பெற்று பதக்க வாய்ப்பை இழந்தார். இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்.
கடந்த 2016 ஆம் ஆண்டில் இவர் பெற்ற வெண்கல பதக்கத்தை கவுரவிக்கும் வகையில் உத்திரப்பிரதேச அரசு இவருக்கு பரிசுத்தொகையாக ரூபாய் 1 கோடியை அறிவித்து இருந்தது. இந்நிலையில் அந்த பரிசுத்தொகையை இன்னும் அரசு வழங்கவில்லை என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது மனைவி சினேகா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, இது பணத்தைப் பற்றியது மட்டுமல்ல. இந்த ஆண்டு ஜனவரியிலும் அவருக்கு வேலை வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அதுவும் கிடைக்கவில்லை. நாங்கள் தொடர்ந்து கடிதங்கள் எழுதி முறையீடு செய்கிறோம், அவர்கள் எங்களை தங்கள் அலுவலகத்திற்கு அழைத்து மீண்டும் மீண்டும் எங்களை கடிதம் கொடுக்கச் சொல்கிறார்கள். ஆனால் பணம் மட்டும் இன்னும் வரவில்லை, இவ்வாறு அவர் கூறினார்.