செய்திகள்

கடலூரில் போலி டிஎஸ்பி : ஊர்க்காவல்படை வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி

கடலூர், ரெட்டிச்சாவடி காவல் சரகம், பெரிய காட்டுப்பாளையம் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபி கே.ரமணன் என்பவரின் மகன் கௌதம் (22), கடலூர் அரசு கலைக் கல்லூரியில் கணினி படிப்பு படித்து இடையில் நின்றவர்.

இவர், தன்னை காவல்துறை டிஎஸ்பி., மற்றும் ஊர்காவல் படையில் அதிகாரியாக உள்ளதாக மற்றவர்களிடம் கூறி நம்ப வைத்துள்ளார். அந்த வகையில், பண்ருட்டி அடுத்துள்ள கீழ்கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளி மகாதேவன் (38), என்பவர் மற்றும் கூழ் கடை நடத்தி வரும் சுமதி ஆகியோரிடம் ஊர்காவல் படையில் அதிகாரியாக உள்ளதாக கூறியுள்ளார். மேலும், ரூ.30 ஆயிரம் கொடுத்தால் ஊர்காவல் படையில் வேலை வாங்கி தருவதாகவும், மாத ஊதியம் ரூ.15 ஆயிரம் வரும் எனக்கூறினாராம். இதை நம்பிய மகாதேவன் தனது உறவினர் மகன் தீர்த்தமலை (28), மற்றும் சுமதி தனது மகன் ஸ்ரீநாத் (24) வேலை வாங்கி தரும்படிக் கூறி கௌதமிடம் பணம் கொடுத்து உள்ளனர்.

இதனிடையே, புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பத்தில் உள்ள ஒரு கணினி மையத்திற்குச் சென்று காவல் துறை அதிகாரி என அறிமுகம் செய்துக்கொண்டு போலியான பணி நியமன ஆணையை தயாரித்து, அதை மேற்படி நபர்களிடம் காட்டி எஞ்சியப்பணத்தை கேட்டு பெற்றுள்ளார். இதனிடையே கௌதம் பணம் வாங்கி வெகு நாட்கள் ஆகியும் வேலை வாங்கித்தராமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், மகாதேவன் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து ஆய்வாளர் க.சந்திரன், உதவி ஆய்வாளர் ப.தீபன் மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், அண்ணா கிராமம் பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த கௌதமை சனிக்கிழமை காலை கைது செய்தனர். பின் அவரிடம் விசாரணை நடத்தியதில் காவல் துறை அதிகாரி எனக்கூறி ஏமாற்றியதை ஒப்புக்கொண்டு உள்ளார். இதையடுத்து, அவரிடம் இருந்து 10 ஆயிரம் பணம், டிஎஸ்பி., சீருடை ஒரு செட், பணி நியமன ஆணை தயாரிக்க பயன்படுத்திய கணினி ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் இவ்வாறு பல பேர் தங்களை காவல் அதிகாரியாக கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர், ஆதலால் மக்கள் ஏமாறாமல் யார் அரசு வேலைக்கு என்று பணம் கேட்டாலும் காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல் துறையினர் கூறினர்.

#visilmedia #todaynewstamil #topnews #news #crime #செய்திகள்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button