தெலங்கானாவில் சாலையில் ராங் ரூட்டில் வந்த அமைச்சரை மடக்கி அபராதம் வசூலித்த போக்குவரத்து காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன .
காந்தி ஜெயந்தி அன்று ஹைதராபாத்தில் உள்ள பாபுகாட்டில் அம்மாநில தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கே . டி . ராமா ராவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த காரில் வந்தார்.
அப்போது அமைச்சர் வழக்கமாக செல்லும் காரை விடுத்து வேறு காரில் அவரே ஓட்டிச் சென்ற நிலையில் போக்குவரத்து எஸ்.ஐ. ஐலய்யா ராங் ரூட்டில் வந்த அமைச்சரின் காரை தடுத்து நிறுத்தி அவருக்கு அபராதம் விதித்தார்.
ராங்ரூட்டில் வந்த தனது காரை தடுத்த போக்குவரத்து எஸ்ஐ ஐலய்யாவுக்கு அமைச்சர் கே.டி. ராமாராவ் வாழ்த்து தெரிவித்தார். அதோடு மட்டுமல்லாமல் கடமையை சரியாக செய்த அவரை அமைச்சர் தனது அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டி கௌரவித்தார்.
போக்குவரத்து விதிமுறைகள் பொது மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஒரே மாதிரியானவை என்றும், விதிகளின்படி பணியாற்றிய ஐலய்யா போன்ற அதிகாரிகளுக்கு அரசு எப்போதும் துணையாக நிற்கும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.
போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதில் தாம் எப்போதும் முன்னணியில் இருப்பேன் என்றும், ஆனால் எதிர்பாராத சூழ்நிலையில் காந்தி ஜெயந்தி நாளில் தவறான பாதையில் வர நேர்ந்துவிட்டது எனவும் அமைச்சர் வருத்தம் தெரிவித்தார்.
அமைச்சரே தவறு செய்தாலும் தண்டனை வழங்கிய போக்குவரத்து காவலருக்கும், தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்ததோடு, போலீசை அழைத்துப் பாராட்டிய அமைச்சருக்கும் நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #trafficpolice #trafficrules #india