பள்ளிகளில் 1ஆம் வகுப்பு மாணவர்களுடன் அமர பெற்றோருக்கு அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார் .
திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை அருகே , வையம்பட்டி ஒன்றியம் 6 ஆவது வார்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் .
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1 ஆம் வகுப்பு சிறுவர் – சிறுமியர் முதல் முறையாக நவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிக்கு வர உள்ளனர் என்றார்.
முகக் கவசத்தை எவ்வளவு நேரம், எவ்வாறு அணிந்திருக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியாது. அதேபோல், முகக்கவசங்கள் கழன்று விழவும் செய்யலாம்.
எனவே, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ள பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளைக் கையோடு அழைத்து வந்து, வகுப்பறையில் அமரவைத்து, அருகில் அமர்ந்து கொள்ளுங்கள்.
குழந்தைகளால் முகக்கவசம் அணிந்துகொண்டு நீண்ட நேரம் உட்கார முடியாவிட்டால், குழந்தைகளைக் கையோடு அழைத்துச் சென்றுவிடலாம்.
அரசைப் பொறுத்தவரை மாணவர்களின் நலனுக்காகப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், வகுப்புகளுக்குக் கட்டாயம் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.