IMPS பண பரிவர்த்தனை வரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தற்போதை நவீன யுகத்தில் மக்கள் பணப்பரிமாற்றங்களுக்கு வங்கிகளை நாடுவதை விரும்ப வில்லை என்றே கூற வேண்டும். விரல் நுனியில் 24 மணி நேரமுல் இயங்கும் கையடக்க வங்கி சேவை அதாவது செல்போனில் ஆன்லைன் பணப்பரிமாற்றங்களையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.
இணையதள வங்கி சேவைகளில் பணப் பரிவர்த்தனை செய்ய NEFT, IMPS, RTGS சேவைகள் உள்ளன. அவ்வாறு ஆன்லைனில் உடனடி கட்டண சேவை என்னும் IMPS சேவையின் மூலம் மக்கள் எந்த நேரத்திலும் பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம்.
இந்நிலையில் இணையதள வங்கி சேவையை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் இன்று ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கை கூட்டத்தில் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி IMPS பணப் பரிமாற்ற சேவையில் ஒரு நாளுக்கு அதிகப்படியாக 2 லட்சம் ரூபாய் மட்டுமே பரிமாற்றம் செய்யப்படும் நிலையில், இந்த வரம்பு 5 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்படும் என ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த் தாஸ் அறிவித்துள்ளார்.
IMPS மற்றும் NEFT பணப் பரிமாற்றத்தை 24 மணி நேரமும் செய்யச் சில மாதங்களுக்கு முன்பு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் தற்போது பணப் பரிவர்த்தனை வரம்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.