செய்திகள்

“பிரச்சாரத்திற்கு வரவில்லை என்றால் வேலைக்கு போக முடியாது” 100 நாள் வேலைதிட்ட பணியாளர்களை தடுத்த திமுகவினர்….

கரூரில், திமுக இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்கு வராத 100 நாள் வேலைதிட்ட பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்த திமுகவினர்.

கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏமூர் ஊராட்சி பகுதியில் மத்திய அரசின் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் நடைபெறும் பணிகளில் பணிசெய்ய சுமார் 70க்கும் மேற்பட்டோர் பதிவு செய்து உள்ளனர் கிராம பொதுமக்கள். கரூரில், மாவட்ட ஊராட்சி 8 ஆவது வார்டுகான தேர்தல் நடைபெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று திமுக சார்பில் இறுதி கட்ட பிரச்சாரம் கரூரை அடுத்த வெள்ளியணை கடைவீதி பகுதியில் நடைபெற்றது. இந்த இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்கு ஒவ்வொரு ஊராட்சி பகுதியில் இருந்தும் திமுகவினர் மற்றும் பொதுமக்களை சரக்கு வாகனங்களில் அழைத்து வந்தனர்.

இதன் அடிப்படையில் ஏமூர் ஊராட்சி பகுதியில் பணியாற்றும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை அழைத்து வரவேண்டும் என பணித்தள பொறுப்பாளர் தாமரைச்செல்வியிடம் திமுகவினர் கூறினர். இதற்கு தாமரைச்செல்வி தாம் நூறு நாள் வேலைத்திட்ட பணிக்கு மட்டுமே அவர்களை அழைத்து வர இயலும். அரசியல் பிரச்சாரப் பணிக்கு அழைத்து வருவதற்கு தனக்கு அதிகாரமில்லை எனவும், அதிகாரிகள் உத்தரவிட்டால் மட்டுமே செயல்பட முடியும் என தெரிவித்துள்ளார்.



இதனால், கடுப்பான திமுகவினர் இன்று ஏமூர் ஊராட்சியில் உள்ள குன்னனூர் பகுதியில் 100 நாள் வேலை திட்ட பணிகள் நடைபெற இருந்த சூழலில் அப்பகுதியைச் சேர்ந்த நூறு நாள் பணியாளர்கள் அங்கு திரண்டனர். அப்போது அங்கு வந்த ஏமூர் ஊராட்சி இரண்டாவது வார்டு திமுக உறுப்பினர் ரமேஷ் மற்றும் சிலர், நேற்றைய தினம் திமுக பிரச்சார கூட்டத்திற்கு வராததால் இன்று நூறு நாள் வேலைத்திட்ட பணிக்கு செல்ல அனுமதிக்க முடியாது என தடுத்தனர். இதுகுறித்து பணித்தள பொறுப்பாளர் தாமரைச்செல்வி மற்றும் முனீஸ்வரி ஆகியோர் இதுகுறித்து தாந்தோணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் அவர்களுக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து இது மத்திய அரசு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணியாகும். இதனை தடுப்பது தவறு என அவர்களுக்கு புரிய வைத்து,பின்னர் 100 நாள் திட்ட பணியாளர்களை பணி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதனைத்தொடர்ந்து பணியாளர்கள் தங்களது பணிக்கு திரும்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து திட்டத்தின் பொறுப்பாளர் தாமரைச்செல்வி செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது, 100 நாள் வேலை திட்ட பணிக்கு மட்டுமே பணியாளர்களை அழைத்து செல்வது எனது பணி என்பது குறித்து திமுகவினரிடம் தெரிவித்தும், பெண் என பாராமல் தகாத வார்த்தை பேசி திட்டினர். இன்று வேலைக்கு வந்தவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் இப்பிரச்சினையை தீர்த்து வைத்து அதன் பேரில் தற்போது அனைவரும் வேலைக்கு திரும்பினர் என தெரிவித்தார்.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #திமுக‌ #100நாள்வேலை #தேர்தல்பிரச்சாரம்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button