செய்திகள்

வாத்தியாரே! என்ன ஒரு ஓட்டு தானா? ஒரு ஓட்டு மட்டும் பெற்று பாஜக வேட்பாளர் தோல்வி

ஊரக உள்ளாட்சி தேர்தலில் விடுபட்ட மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. அதேபோல பல்வேறு பகுதிகளில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெறுகிறது. இதில் திமுக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. கோவை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றி வருகிறது. அந்த வகையில் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9 ஆவது வார்டுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் அருள்ராஜ், அதிமுக சார்பில் வைத்தியலிங்கம், பாஜக சார்பில் கார்த்திக், தேமுதிக சார்பில் ரவிக்குமார் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால் இப்பதவிகளுக்கு கட்சியின் அதிகார சின்னங்கள் ஒதுக்கப்படாமல் சுயேட்சை சின்னங்கள் ஒதுக்கப்படுவது வழக்கம். அதன்படி திமுக வேட்பாளர் கட்டில் சின்னத்திலும், அதிமுக வேட்பாளர் சங்கு சின்னத்திலும், பாஜக வேட்பாளர் கார் சின்னத்திலும், தேமுதிக வேட்பாளர் பெயிண்டிங் பிரஸ் சின்னத்திலும் போட்டியிட்டனர். மொத்தம் சுயேட்சைகள் உட்பட மொத்தம் 6 வேட்பாளர்கள் அப்பதவிக்கு போட்டியிட்டனர்.

குருடம்பாளையம் 9 ஆவது வார்டில் மொத்தம் 1,551 வாக்குகள் உள்ள நிலையில், தேர்தலில் 913 வாக்குகள் பதிவாகின. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே திமுக சார்பில் போட்டியிட்ட அருள்ராஜ் முன்னிலை வகித்து வந்தார். அருள்ராஜ் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்ததாக சுயேச்சை வேட்பாளர் ஜெயராஜ் 240 வாக்குகளை பெற்றார். 147 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்வாளர் அருள்ராஜ் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் வைத்தியலிங்கம் 196 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். 3 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அருள்ராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பாஜக சார்பில் போட்டியிட்ட கார்த்திக் 1 வாக்கையும், தேமுதிக ரவிக்குமார் 2 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

பாஜக சார்பில் போட்டியிட்ட கார்த்திக், அக்கட்சியின் இளைஞரணி மாவட்ட துணை தலைவராக உள்ளார். ‘கார்த்திக் உள்பட அவர் குடும்பத்தில் மொத்தம் 6 பேர் உள்ளனர். அவர் சார்ந்த கட்சியினர் வாக்களிக்கவில்லை என்றாலும், அவரது குடும்பத்தினராவது வாக்களித்திருந்தாலே இதைவிட அதிகம் வாக்கு வாங்கியிருக்க முடியும். குடும்பத்தினர் கூட அவரை ஆதரிக்கவில்லை. அந்த ஒரு ஓட்டும் அவர் போட்டது தானா? அல்லது வேறு யாரேனும் போட்டனரா?’ என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இது குறித்து சமூக வலைதளங்களிலும் பலர் கிண்டலாக கருத்துகளை பகிர்ந்து வருகின்றன

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #உள்ளாட்சிதேர்தல் #பாஜகவேட்பாளர் #ஒருஓட்டு #கோவை

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button