எல்லாம் உள்ளூர் செல்வாக்குதான். நடிகர் விஜய்க்காக யாரும் வாக்களிக்கவில்லை என விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை பலர் விமர்சனம் செய்துள்ளார்கள்.
தமிழ் மண் தமிழருக்கே உள்ளிட்ட கொள்கையுடன் நாம் தமிழர் என்ற கட்சியை தொடங்கியவர் சீமான். இந்த கட்சியானது கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் ஈழத்தமிழர் படுகொலையின் போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சி அந்த இனப்படுகொலையை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற காரணத்தினால் அந்த ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்கள்.
இதையடுத்து 2016 ஆம் ஆண்டு 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டனர். அது போல் புதுச்சேரி, காரைக்காலிலும் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் தோல்வி அடைந்த நாம் தமிழர் கட்சி 1.1 சதவீதம் வாக்கு சதவீதத்தை பெற்றது.
இதையடுத்து 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே நகர் இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி பங்கேற்றது. இந்த தேர்தலில் 11.72 சதவீதம் வாக்குகளை பெற்றது. இதையடுத்து 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அக்கட்சி 3.909 சதவீதம் வாக்குகளை பெற்றது.
இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டசபை தேர்தலிலும் தனித்து போட்டியிட்ட இந்த கட்சி ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை. இந்த தேர்தலில் 6 சதவீதம் வாக்கு வங்கியை பெற்றது. இப்படியாக தற்போது நடந்த 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி களமிறங்கியது. ஆனாலும் ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை என தெரிகிறது.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் அரசியலுக்கு வந்த சீமான் கட்சி இத்தனை தேர்தல்களிலும் ஒரு இடத்திலும் ஜெயிக்கவில்லை. ஆனால் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் சுயேச்சையாக 169 இடங்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 109 இடங்களில் வெற்றியை சுவைத்துள்ளனர்.
விஜய் நேரடியாக அரசியலுக்கு வராவிட்டாலும் அவரது இயக்கத்தினர் மற்ற கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு வென்றது மற்ற கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். அப்படியிருக்கும் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானோ விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் உள்ளாட்சி தேர்தலை பொருத்தவரை உள்ளூர் செல்வாக்குத்தான் முக்கியம். விஜய்க்காக வாக்களித்தார்கள் என நான் நினைக்கவில்லை. அதிக இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வென்றிருந்தால் வாழ்த்துகள். நாம் தமிழர் படுதோல்வியடையவில்லை. சில இடங்களில் வென்றிருக்கிறது. ஒரே நாளில் ஒரு செடி பூத்துவிடாது. படிப்படியாகத்தான் ஒரு கட்சி வளரும் என சீமான் தெரிவித்துள்ளார்.
இதை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு உள்ளூர் செல்வாக்கு இருக்கும் போது ஏன் உங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு அந்த செல்வாக்கு இல்லை என்கிறீர்களா? இல்லை செல்வாக்கு இல்லாத நபரை வேட்பாளராக்கினீர்களா? என கேட்கிறார்கள்.
அடுத்தவர்களை திட்டுவதை விட்டு விட்டு கட்சி வளர்ச்சியையும் வெற்றி பெற்றால் செய்யப்போகும் நலத்திட்டங்களையும் சொல்லி இருந்தால் கணிசமான இடங்கள் கிடைத்திருக்கும் என நெட்டிசன்கள் சீமானை கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #உள்ளாட்சிதேர்தல் #விஜய்_மக்கள்_இயக்கம் #விஜய் #சீமான் #நாம்_தமிழர்_கட்சி