செய்திகள்

பிடிச்சாச்சு!! டி23 ஆட்கொல்லி புலி உயிருடன் பிடிப்பட்டது…

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் T 23 எனப் பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், மனிதர்களையும் தாக்கி வந்தது.

உடலில் ஏற்பட்டுள்ள காயத்துடன் காட்டை விட்டு வெளியேறிய அந்த புலி, தேயிலைத் தோட்டங்களில் நடமாடி வந்தது. இந்நிலையில் தேவன் எஸ்டேட் பகுதியில் சந்திரன் என்பவரையும், சிங்காரா பகுதியில் மங்கள பசவன் என்பவரையும் அடித்துக் கொன்றது. ஏற்கனவே இரண்டு பேரை புலி தாக்கி கொன்ற நிலையில், டி 23 புலியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்தது.

புலி நடமாட்டம் காரணமாக கூடலூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், புலியை பிடிக்கக் கோரி தொடர் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். டி 23 புலி இதுவரை 4 மனிதர்களையும், 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்றுள்ளதாக கூறும் உள்ளூர் மக்கள், புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என வலியுறுத்தினர். இதனிடையே சுட்டுக் கொல்லக் கொள்ளாமல் உயிருடன் பிடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர். புலியைத் தேடும் பணியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில வனத்துறையினர், தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினர் உள்ளிட்டோரும் ஈடுபட்டனர். புலி தேடுதல் வேட்டையில் 2 கும்கி யானைகள், 3 மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டன. 3 ட்ரோன்கள் மற்றும் அதி நவீன கேமராக்கள் மூலம் புலி இருப்பிடத்தை தேடும் பணிகள் நடைபெற்றன. இருப்பினும் புலி பிடிபடாமல் சுற்றி வந்தது.

முதுமலை சரணாலயம் புலிகள் மறைந்து வாழும் அளவிற்கு புதர்மண்டி காணப்படும் சரணாலயம் என்பதாலும், அதிகளவிலான புலிகள் அப்பகுதியில் இருப்பதாலும் டி 23 புலியை பிடிப்பதில் வனத்துறையினருக்கு பல்வேறு சவால்களும், சிக்கல்களும் ஏற்பட்டன. மேலும் தொடர் மழை காரணமாகவும் புலியை பிடிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டி 23 புலி போஸ்பாரா வனப்பகுதியில் இருப்பது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது.

இந்நிலையில் நேற்றிரவு தெப்பக்காடு அருகே டி 23 புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முயற்சி செய்தனர். அப்போது இரண்டு மயக்க ஊசி செலுத்திய நிலையில், தப்பிச் சென்றது. இதையடுத்து இரவு நேரம் முழுவதும் தேடியும் புலி அகப்படவில்லை. இன்று 21 வது நாளாக மசினகுடி, மாயார் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதனிடையே முதுமலை வன சோதனைச் சாவடி அருகே புலி சென்றது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் புலியை பின் தொடர்ந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது மாயார் அருகேயுள்ள கூட்டுறுபாறை பகுதியில் இருந்த டி 23 புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இதையடுத்து அந்த புலியை முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். புலியின் உடல் நிலையை ஆய்வு செய்த பின்னர், புலியை எங்கு கொண்டு செல்வது என்பது குறித்து வனத்துறையினர் முடிவு செய்ய உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்திய புலியை உயிருடன் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #T23Tiger #டி23_புலி #ஆட்கொல்லிபுலி #வனத்துறை

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button