அரசியல்

இனி “தியாக தலைவி” இல்லை.. “புரட்சி தாய்” ஆனார் சசிகலா..! காரணம் என்ன??

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா, ஜெ., மறைவுக்குப் பின் சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்றார்.

இதற்கிடையில் அதிமுகவின் தலைமையில் மாற்றம் ஏற்பட்டு, எடப்பாடி பழனிச்சாமி-ஓபிஎஸ் ஆகியோர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டனர், செயல்படுகின்றனர். இந்நிலையில் சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, அதிமுகவை கைப்பற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் போனது. அவர் எதிர்பார்த்த ஆதரவு கட்சியில் கிடைக்காததால் தேர்தல் சமையத்தில் ஒதுங்கியிருப்பதாக அறிக்கை விட்டார் சசிகலா.



தேர்தல் நிறைவுபெற்று, அதிமுக தோல்வியை தழுவிய பின் மீண்டும் அரசியல் பிரவேசத்தை தொடங்கிய சசிகலா பல்வேறு முயற்சிகளை முன்வைத்தார். ஆடியோ வெளியீடு, தொண்டர்கள் சந்திப்பு என அவர் செய்த அத்தனை முயற்சியும் அதிமுகவை கைப்பற்ற பலனளிக்கவில்லை. இந்நிலையில் அதிமுக பொன்விழா ஆண்டை கொண்டாட அதிமுக தலைமை முடிவு செய்து, அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியது. அதே நேரத்தில், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மீண்டும் தனது காய் நகர்த்தும் பணியை முன்னெடுக்க தயாரானார் சசிகலா. தோல்வியை காரணம் காட்டி தொண்டர்களை அரவணைக்கலாம் என்பது அவரது திட்டம்.

அதற்காக இன்று சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவின் நினைவிடங்களுக்கு மரியாதை செலுத்தச் செல்கிறார் சசிகலா. சிறைக்கு சென்று சசிகலா திரும்பிய போது, அப்போது ஆளும் அரசாக இருந்த எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு, நினைவிடத்திற்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் சசிகலா அங்கு செல்ல முடியாமல் தவித்தார். தற்போது திமுக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் முறையான அனுமதி பெற்று, இன்று மெரினா செல்கிறார் சசிகலா. தனக்கு அச்சுறுத்தல் இன்றி பாதுகாப்பு வழங்கவும் முன்பு போலீசாரிடம் சசிகலா தரப்பில் மனுவும் அளிக்கப்பட்டிருந்தது.



இந்நிலையில், சசிகலாவின் அரசியல் பிரவேசம் முதல் தற்போது வரை ‘தியாகத் தலைவி’ என்கிற பட்டத்தில் தான் சசிகலா தன்னை முன்னிலைப்படுத்தினார். ஜெயலலிதாவிற்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்து கடைசி வரை அவருடன் பணியாற்றினார் என்பதை குறிப்பதற்காக இந்த சொல்லாடல் பயன்படுத்தப்பட்டது.

இதற்கிடையில் சில நாட்களுக்கு முன் பேஸ்புக்கில் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஒரு பதிவு போட்டிருந்தார். அதில், ‘தியாகம்’ என்கிற வார்த்தையை சசிகலா நீக்க வேண்டும் என்றும், கட்சியை தியாகம் செய்வதாக அந்த அர்த்தம் வரலாம் என்கிற முறையில் அந்த பதிவு இருந்தது.

இந்நிலையில் இன்று மெரினா கடற்கரை செல்லும் சசிகலா குறித்த செய்தி அவரது அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியில் காலையில் இருந்து ஒளிபரப்பாகி வந்தது.

https://twitter.com/jayapluschannel/status/1449204350266478592?t=dzUXc_UXXaXxlICLU6XjiA&s=19


அதில் வழக்கமாக பயன்படுத்தும் ‘தியாகத் தலைவி’ என்கிற பட்டத்திற்கு பதில், ‘புரட்சித் தாய்’ என்கிற பட்டத்தை பயன்படுத்தி செய்தி வெளியாகிறது. இதன் மூலம் இன்று முதல், தன் பட்டத்தை மாற்றியிருக்கிறார் சசிகலா. கட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் முன் தன்னிலிருந்து மாற்றத்தை தொடங்கியிருக்கிறார் சசிகலா.

புரட்சித் தலைவி என்கிற பட்டத்துடன் ஜெயலலிதா அழைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புரட்சித் தாய் என்கிற பட்டத்தை சசிகலா தனக்கு சூட்டிக்கொண்டுள்ளார்.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தமிழகஅரசியல் #சசிகலா #புரட்சிதாய் #சின்னம்மா #அதிமுக #ADMK #Sasikala #PuratchiThaai

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button