நாம் ஒன்றாக வேண்டும், கழகம் வென்றாக வேண்டும் எனப் பேசி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார் சசிகலா.
இதன் மூலம் பொதுவாழ்க்கையில் தனக்கிருக்கும் பொறுமையையும், அரசியல் முதிர்ச்சியையும் அவர் வெளிப்படுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது.
தொடர்ந்து ஒற்றுமை ஒன்றையே அனைத்து இடங்களிலும் சசிகலா வலியுறுத்தி பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்தில் நடைபெற்ற அதிமுக பொன்விழா துவக்க நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சசிகலா, கண் போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமா, மனம் போனம் போக்கிலே மனிதன் போகலாமா என்ற பாடலை சுட்டிக்காட்டி இந்தப் பாடல் இப்போது யாருக்கு பொருந்தும் என்பதை தொண்டர்கள் முடிவுக்கே விட்டுவிடுவதாக தெரிவித்தார். இதற்கு பலத்த கரவொலி எழுப்பிய அவரது ஆதரவாளர்கள் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். பெயரை மேடைக்கு கீழிறிந்து கூறினர்.
அதிமுக என்ற ஆலமரத்துக்கு எம்.ஜி.ஆர் விதையாகவும், ஜெயலலிதா மழையாகவும் இருந்ததாக கூறிய சசிகலா, அவர்கள் இருவரால் தான் கட்சி விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது எனப் புகழாரம் சூட்டினார். இந்த நேரத்தில் நமக்குத் தேவை ஒற்றுமை தான் என்றும் நீரடித்து நீர் விலகுமா எனவும் கேள்வி எழுப்பினார். நமக்குள் ஏற்பட்ட பிரிவுகள் தான் நமது எதிரிகளுக்கு இடம் கொடுத்துவிட்டதாக கூறிய சசிகலா, தொண்டர்கள் நலனில் அக்கறைக்காட்டா விட்டால் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் தூக்கி எறியப்படுவோம் என்பதை எல்லோரும் உணர வேண்டும் என ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்.க்கு சூசகமாக அட்வைசும் செய்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நெருக்கடிகள் தம்மைச் சூழ்ந்த போதும், அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்துவிட்டுத்தான் தாம் சிறைக்கு சென்றதாக சசிகலா தெரிவித்தார். நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை கொண்டு வரவேண்டும் எனப் பேசிய சசிகலா, நாம் ஒன்றாக வேண்டும்,கழகம் வென்றாக வேண்டும் என அழுத்தமாக குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா நிச்சயம் இன்று விமர்சிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் ஒற்றுமையை வலியுறுத்தி பேசி தனது அரசியல் பக்குவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். சசிகலா இவ்வளவு தூரம் இறங்கி வந்து, தொடர்ந்து பொறுமை காப்பது அவரது ஆதரவாளர்கள், அரசியல் பார்வையாளர்கள், உட்பட அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #அதிமுக #சசிகலா #எடப்பாடிபழனிச்சாமி #ஓ_பன்னீர்செல்வம் #ஓபிஎஸ் #ஈபிஎஸ் #Sasikala #OPS #EPS #ADMK #AIADMK