சென்னை நாளுக்கு நாள் நவீனமாகிக் கொண்டே சென்றாலும் கூட திடக்கழிவு மேலாண்மை என்பது சென்னையின் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகவே உள்ளது.
தலைநகர் சென்னை தூய்மையாக பராமிக்க சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களுக்கு ரூ 100 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் எனச் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
அதாவது பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளைத் தூக்கி எறிபவர்கள் மற்றும் வாகனத்திலிருந்து குப்பைகளை எறிபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மேலும், தரம் பிரிக்கப்படாத குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கும் அபராதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தரம் பிரிக்கப்படாத குப்பைகளைக் கொட்டுபவர்களில் தனிநபர் இல்லங்களுக்கு ரூ 100, அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு ரூ.1,000, பெருமளவுக் குப்பை உருவாக்குபவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்டுமானம் மற்றும் இடிபாடு கழிவுகளை ஒரு டன் அளவுக்கு பொது இடங்களில் கொட்டுபவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும், அதற்கு மேல் கொட்டுபவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது தவிர தோட்டக்கழிவுகள் மற்றும் மரக்கழிவுகளை பொது இடங்களில் கொட்டுபவர்களிடம் இருந்து 200 ரூபாய், கழிவுநீர் மற்றும் கால்வாய் பகுதிகளில் குப்பைகளைக் கொட்டுபவர்களிடம் இருந்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
அதேபோல திடக்கழிவுகளை எரிப்பவர்களுக்கு 500 முதல் 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
பொதுமக்கள் குப்பைத் தொட்டியில் குப்பைகளைப் போட்டு, சென்னை நகரைத் தூய்மையாக வைத்திருக்க முன்வர வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக கடந்த 11-ம் தேதி முதல் 13-ந் தேதி வரை மூன்று நாட்களில் மட்டும் பொது இடங்களில் குப்பை கொட்டிய 507 நபர்களிடமிருந்து 3.19 லட்சம் ரூபாய் அபராதமும், பொது இடங்களில் கட்டுமான கழிவுகளைக் கொட்டிய 123 நபர்களுக்கு 3.24 லட்சம் ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #சென்னை #குப்பைகிடங்கு #சென்னை_சுகாதாரத்துறை #chennaicorporation #chennai