“500கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும்” அண்ணாமலைக்கு நோட்டீஸ்…
பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு எதிராக பி.ஜி.ஆர் நிறுவனம் 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளது .
தமிழக பா . ஜ . க தலைவராக இருக்கும் அண்ணாமலை , தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக , ‘ முறைகேடு ‘ புகாரை முன்வைத்தார் . அதில் , ‘ தற்போது நலிவடைந்துள்ள நிலையிலுள்ள ஒரு மின்நிலையத்தை , ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவர் வாங்கி , அதன் வாயிலாக , ரூ .5,000 கோடிக்கு மின்சாரம் விற்க , தமிழக மின்வாரியத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார் .
ஆளுங்கட்சியைச் சேர்ந்த சில அமைச்சர்களும் லாபத்தை ஈட்டுவதற்காகத்தான் இந்த ஒப்பந்தம் நடக்கிறது . எந்த நிறுவனம் , எந்த அமைச்சர் என்ற பெயரை தற்போது வெளியிட விரும்பவில்லை . திரும்பவும் 2006 -11 பாதைக்குப் போக மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியிருந்தார்.
அப்படிப் போகும்போது, பா.ஜ.க-வுக்கு வேறு வழியில்லை, ஒப்பந்தப் பேச்சு குறித்து எங்களிடம் உள்ள ஆவணங்களை மக்கள் முன் வெளியிடுவோம்’ என்று பேசியிருந்தார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனையடுத்து, ஆதாரம் இருந்தால் அண்ணாமலை வெளியிட வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியிருந்தார். அதனையடுத்து, மின்சார வாரியம் சார்பில் வழங்கப்பட்ட பண பட்டுவாடா விவரங்கள் கொண்ட எக்செல் சீட் ஒன்றை அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டார்.
இருவருக்கும் இடையே வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை அடைந்தது. மின்சாரத்துறையில் ஊழல் நடக்கிறது. மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்திவந்தார்.
இதனிடையே கோபாலபுரம் – பிஜிஆர் எனர்ஜி – மின்சார அமைச்சகம் – செந்தில்பாலாஜி இந்தப்புள்ளிகளை இணைத்துப் பாருங்கள் எளிதில் விடை புரியும் என்று அண்ணாமலை அண்மையில் ட்வீட் செய்திருந்தார்.
இந்தநிலையில், அண்ணாமலை 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று பி.ஜி.ஆர் நிறுவனம் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #அண்ணாமலை #BJP #BGREnergy #TNEB #Annamalai