டிஜிபியை கூப்பிட்டு ரவுண்டு கட்டிய முதல்வர் முக.ஸ்டாலின்!
தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவை அழைத்த ஸ்டாலின் அவரிடம் லக்னோ மாநாடு தொடர்பாக விளக்கம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரே நாடு, ஒரே மொழி என்ற ரீதியில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதற்கிடையே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பும் ஆர்வலர்களுக்கு மத்திய அரசு இந்தியில் பதில்கள் அனுப்பப்படுவது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன.அதேசமயம், தமிழக அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் இந்தி தெரியாத காரணத்தால் தங்களுக்கு நேர்ந்த சம்பவங்களை தெரிவித்ததன் மூலம் இந்தி திணிப்பு விவகாரம் தமிழகத்தில் அண்மையில் பூதாகரமானது. இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கப்பட்டன. மேலும், ஹிந்தி தெரியாது போடா, I am a தமிழ் பேசும் indian என்று அச்சிடப்பட்ட வாசகங்கள் அணிந்த டிஷர்ட்டை பிரபலங்கள் அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலங்களில் முன்னணியில் இருப்பது தமிழ்நாடு. மொழிப் போராட்ட வரலாறை எடுத்துக் கொண்டால் அதில், தாய்மொழி உரிமைகளின் மீது ஆழ்ந்த அழுத்தத்தைக் கொண்டிருக்கும் திராவிட இயக்கங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவமானது. குறிப்பாக, இந்தித் திணிப்புக்கு எதிரான அசைந்து கொடுக்காத கொள்கை நிலைமையை கலைஞர் காலம் தொட்டு திமுக கொண்டிருக்கிறது.ஸ்டாலின் கைக்கு போன ரிப்போர்ட்: கலக்கத்தில்…இந்த பின்னணியில், 10 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியை பிடித்திருக்கும் திமுக, தொடர்ந்து பிராந்திய மொழிகளுக்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகிறது. ஒன்றிய அரசு என்று சட்டப்பேரவையிலேயே முழங்கிய ஸ்டாலின், மாநில உரிமைகளையும், தமிழ் மொழிக்கான முக்கியத்துவத்தையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.இந்த நிலையில், சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறை விவகாரங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் நடத்தப்படும் மாநில டிஜிபிக்கள் மாநாடு உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது. 56ஆவது மாநில காவல்துறை தலைவர்கள் மாநாட்டில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இரண்டு நாட்கள் நடைபெற்ற அந்த மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட டிஜிபி சைலேந்திர பாபு, மாநாட்டில் இந்தியில் பேசியுள்ளதாக தெரிகிறது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அவருக்கு இந்தி மொழி தெரியாது என்பதுதான். ஆனாலும், வலதுசாரி சிந்தனை கொண்ட ஏடிஜிபி ஒருவரின் உதவியுடன் அவர் இந்தியில் எழுத்திக் கொடுத்த பாயிண்டுகளை கச்சிதமாக அப்படியே சைலேந்திர பாபு பேசியதாக தெரிகிறது.இந்த விஷயம் உடனடியாக முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கும் கோட்டை வட்டாரத் தகவல்கள், தகவலறிந்து சைலேந்திர பாபுவை உடனடியாக அழைத்த ஸ்டாலின், இந்தியில் பேசியது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டதுடன், லேசாக கடிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளன. மேலும், அறையை விட்டு சைலேந்திர பாபு செல்லும் முன்னர் அவருக்கு சில அறிவுறுத்தல்களையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கியதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக, தமிழ்நாட்டின் டிஜிபி பதவியை கைபற்ற கடுமையான போட்டி நிலவிய நிலையில், ஸ்டாலினின் சாய்ஸாக இருந்தவர் சைலேந்திர பாபு, லக்னோ மாநாட்டில் ஆங்கிலத்திலேயே பேசியிருக்கலாம். தனக்கு இந்தி தெரியாத நிலையிலும், யாரை திருப்திப்படுத்துவதற்காக அவர் இந்தியில் பேசினார் என்ற பேச்சுக்கள்தான் கோட்டை வட்டாரத்தில் தற்போது அதிகமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறதாம்.
செய்திகள் : எம். ஆர்.கிருஷ்ண பிரபு, மதுரை