அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மாவட்டக்குழு கூட்டம் திண்டுக்கல்லில், நத்தம் சாலையில் உள்ள குடகனாறு இல்லத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் கதிரவன் கலந்துகொண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி போட்டியிடும். இந்த தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்பமனுக்களை அடுத்த மாதம் (டிசம்பர்) 13-ந்தேதி பெறப்படும்.
மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ஓராண்டுக்கு பிறகு வாபஸ் பெற்றுள்ளது. இதற்காக நடந்த போராட்டத்தில் 500 பேருக்கு மேல் விவசாயிகள் இறந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். திண்டுக்கல்லில் முத்துராமலிங்க தேவர் சிலை அமைக்க முடிவு செய்துள்ளோம்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதேபோல் மழை வெள்ள சேதங்களை பார்வையிட்டு நிவாரணம் வழங்குவது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதிலும் முதல்-அமைச்சர் திறம்பட செயல்பட்டுள்ளார்.
அடுத்த கல்வி ஆண்டுக்குள் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். அதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
செய்திகள் : ரியாஸ், திண்டுக்கல்