பாகிஸ்தானில் கொடூரம் – இலங்கை நாட்டவர் படுகொலை
பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்தை இழிவு படுத்தியதாக இலங்கை நாட்டவரான பிரியந்த தியவதன குமாரா என்பவர் படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு இலங்கை சார்பாக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் படுகொலையில் ஈடுபட்ட மதவாதிகள் அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட் என்னும் மாவட்டத்தில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த பிரியந்த தியவதன குமாரா ஜெனரல் மேனேஜராக பணியாற்றி வந்துள்ளார். அவரது தொழிற்சாலையின் வெளியே அடிப்படைவாதக் கட்சியான தெஹ்ரீக்-ஏ-லப்பைக் பாகிஸ்தான் கட்சியின் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. அவ்வாறு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை பிரியந்த தியவதன குமாரா கிழித்தெறிந்து குப்பைத் தொட்டியில் போட்டதாக கூறப்படுகிறது.
அவ்வாறு குப்பையில் வீசப்பட்ட அந்த சுவரொட்டியில் மீது இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் வாசகங்கள் இடம் பெற்றிருந்ததாகவும், அதை இழிவுபடுத்தும் வண்ணமாக பிரியந்த தியவதன குமாரா அதைக் கிழித்து குப்பைத் தொட்டியில் வீசியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்களை அடுத்து ஹ்ரீக்-ஏ-லப்பைக் என்ற பாகிஸ்தான் கட்சியினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பிரியந்த தியவதன குமாரா தொழிற்சாலை எதிரே ஒன்று திரண்டனர்.
அதன் பின்னர் தொழிற்சாலைக்குள் நுழைந்தவர்கள் பிரியந்தா தியவதன குமாராவை வெளியே தரதரவென இழுத்து வந்து கட்டாயம் கல்லாலும் மாற்றி மாற்றி கொடூரமாக அடித்து அவரை கொன்றுள்ளனர். அவர் உயிரிழந்த நிலையிலும்கூட வெறி தீராமல் பிரியந்தா தியவதன குமாராவின் உடலை தீ வைத்து எரித்தனர்.
இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் வசனங்கள் இருந்து சுவரொட்டியை கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டு இழிவு படுத்தியதாக கூறி இவ்வாறு பிரியந்தா தியவதன குமாராவை படுகொலை செய்து எரித்த இச்சம்பவத்திற்கு கண்டனங்கள் வலுப்பெற்று வருகின்றன.
இலங்கை நாட்டு குடிமகன் பாகிஸ்தானின் மதவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இலங்கை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. கொத்தபயா மற்றும் மகிந்த ராஜபக்சா தலைமையிலான ஆளும் கட்சி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை தொலைபேசியில் அழைத்து தங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இச் சம்பவத்திற்கு காரணமான மதவாதிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.