அடிப்படை வசதி கோரி
திருப்பூர் மாநகராட்சி
மண்டல அலுவலகம் முற்றுகை
திருப்பூரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாநகராட்சி மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் போயம்பாளையத்தில் மாநகராட்சியின் இரண்டாவது மண்டல அலுவலகம் அமைந்துள்ளது. மாநகராட்சி 7வது வார்டிற்கு உட்பட்ட பல இடங்களில் சாலை, வடிகால் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பல முறை கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த 300க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டு
இரண்டாம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து உதவி ஆணையாளர் கண்ணனையும் முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். மிக விரைவில் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி ஆணையாளர் உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் சமாதானம் அடைந்து முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.
செய்தியாளர் விஜய்,
திருப்பூர் மாவட்டம்.