அடிப்படை வசதி கோரி
ஊராட்சி அலுவலகம் முற்றுகை
பொள்ளாச்சியில் அடிப்படை வசதிகள் கோரி இரண்டாவது முறையாக பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது மாக்கினாம்பட்டி ஊராட்சி. நகராட்சி பகுதியை ஒட்டிய இந்த ஊராட்சிக்கு உட்பட்ட 12 வார்டுகளில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இங்கு கடந்த சில ஆண்டுகளாகவே குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் முறையாக செய்து கொடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கோரிக்கை தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டனர்.
ஆனால் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாகவே இருந்து வருவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் அதிருப்தியடைந்த பொதுமக்கள் இரண்டாவது முறையாக மீண்டும் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின், அடிப்படை வசதிகள் விரைவில் செய்து கொடுக்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் உறுதி அளித்ததின் பேரில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.