பள்ளி மாணவர்கள் மூவருக்கு கொரோனா தொற்று
பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில் படிக்கும் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த புரவிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிலர் கேரளா மாநில பகுதிகளிலிருந்து வந்து செல்கின்றனர். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் 2 மாணவர்கள், ஒரு மாணவி என மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
இதனையடுத்து பள்ளிக்கூட வளாகம் மற்றும் வகுப்பறைகளில் சுகாதாரத்துறையினர் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக பள்ளியில் படிக்கும் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. மீதமுள்ள மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பாதித்த மூன்று மாணவர்களும் அவரவர் வீட்டில் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.
முழுமையான பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு பள்ளி மீண்டும் இயங்கும் என்றும் அதுவரை காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றும் அப்பள்ளியின் தலைமையாசிரியர் உதயராணி தெரிவித்தார்.