மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.167.06 கோடியில் 2019 ஜனவரியில் துவங்கிய பெரியார் பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணி 80 சதவீதம் முடிந்தநிலையில் இன்று (டிச., 8) காலை 10:00 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறக்கிறார்.பா.ஜ., மத்தியில் பொறுப்பேற்றதும் 2015ல் ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிவிக்கப்பட்டு மதுரைக்கு ரூ.1,020 கோடியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் அறிவிக்கப்பட்டன. பெரியார் பஸ் ஸ்டாண்ட் பணி 18 மாதங்களில் முடிக்க திட்டமிட்டு தற்போது முடியும் நிலையில் உள்ளது.பெரியார் பஸ் ஸ்டாண்ட், சுற்றுலா மையம், பழைய சென்ட்ரல் மார்க்கெட்டில் மல்டி லெவல் பார்க்கிங், வைகை மேம்பாடு, ஜான்சிராணி பூங்கா வர்த்தக கூடம், குன்னத்துார் சத்திரம், புராதன தலங்களுக்கு இணைப்பு ரோடு, தமுக்கம் கலாசார மையம் உள்ளிட்ட பணிகள் இத்திட்டத்தில் நடக்கின்றன.
ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட்டில் கடைகள், வாகன காப்பகம் கட்டப்படுகின்றன. ஆறு அடுக்குகளாக அமையும் பெரியார் பஸ் ஸ்டாண்டில் 58 பஸ்கள் நிறுத்தலாம். அடித்தளம் 1ல் 200 கடைகள், 260 கார்கள் நிறுத்தம், அடித்தளம் 2ல்4269 டூவீலர்கள் நிறுத்தம், இன் அண்ட்அவுட் வாகன வழித்தடங்கள், 3 பிக்கப் – டிராப் இடங்கள், தரை தளத்தில் 43 கடைகள், 2 உணவகங்கள், ஒரு காத்திருப்பு கூடம், ஒரு கிளாக் ரூம், ஒரு பாலுாட்டும் அறை, மூன்று அலுவலக இடங்கள், ஒரு மருந்தகம், ஒரு தபால் அலுவலகம், இரு மின்சார அறைகள், ஒரு விசாரணை அறை, ஒன்று மற்றும் 2ம் தளங்களில் தலா 44 இடங்கள், 3, 4ம் தளங்களில் 9 வணிக கடைகள், உணவகம், கழிவறை, மின்சார அறைகள் கட்டப்படுகின்றன. இத்துடன் ஏ.டி.எம்., தபால், டிக்கெட் முன்பதிவு அலுவலகம், குடிநீர், லிப்ட், எக்சலேட்டர், பஸ் ஸ்டாண்ட் முதல் ரயில்வே ஸ்டேஷன் வரை சுரங்க நடைபாதை அமைகிறது. தற்போது பஸ் ஸ்டாண்ட் சுவர்களில் பாரம்பரிய ஓவியங்கள் தீட்டப்பட்டு உள்ளே மதுரையின் வரலாற்று சின்னங்கள் டிஜிட்டல் படங்களாக வைக்கப்பட்டுள்ளன.இன்று காலை 10:15 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பஸ் ஸ்டாண்ட், சுற்றுலா மையம், ஜான்சிராணி பூங்கா ஆகிய கட்டுமானங்களை திறக்கிறார். இதற்காக பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.