துப்பாக்கி விவகாரம்: போலீஸ் விசாரணை தீவிரம்
பொள்ளாச்சியில் ரோட்டில் கிடந்த துப்பாக்கி விவகாரம் தொடர்பாக போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது மகளைப் பார்க்க பொள்ளாச்சிக்கு வந்துள்ளார். பஸ்சை விட்டு இறங்கி கோவை ரோட்டில் உள்ள தியேட்டர் ஒன்றின் அருகே நடந்து வந்த போது ரோட்டின் ஓரத்தில் துப்பாக்கி ஒன்றும் இரு கை உறைகளும் இருந்ததாகக் கூறி மூதாட்டி அதனை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.
இச்சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பொள்ளாச்சி டி.எஸ்.பி. தமிழ்மணி கூறியதாவது, மூதாட்டி ஒப்படைத்த கைத்துப்பாக்கி உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ரகமாகும். அதில் தோட்டாக்கள் எதுவும் இல்லை.
இதுதொடர்பாக அந்த மூதாட்டியிடம் இருந்து விசாரணையைத் தொடங்கினோம். திருட்டு வழக்குகள் உள்ள அந்த மூதாட்டியின் மகனையும் அழைத்து விசாரித்தோம்.
துப்பாக்கி கிடந்ததாக கூறப்படும் பகுதியிலுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். நகரிலுள்ள லாட்ஜ்களிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மகாலிங்கபுரம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நகரின் முக்கிய பகுதிகளில் ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு கோணங்களிலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.