கள் விற்றவர் கைது
போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
பொள்ளாச்சியை அடுத்த நெகமத்தில் கள் விற்றவரை கைது செய்ததை கண்டித்து விவசாயிகள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
பொள்ளாச்சி அடுத்த நெகமம் அருகே உள்ள
மூலனூர் பகுதியில் கள் இறக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நெகமம் போலீசார் ரோந்து சென்றபோது நாயக்கர் தோட்டம் எனும் பகுதியில் கள் இறக்கி விற்பனை செய்வது தெரிய வந்தது. இதனை அடுத்து கள் விற்பனை செய்த நவநீதகிருஷ்ணன் ( வயது47) என்பவரை கைது செய்து, அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த
3 லிட்டர் கள்ளையும் பறிமுதல் செய்தனர்.
தகவல் அறிந்ததும் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் நெகமம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு குவிந்தனர். நவநீதகிருஷ்ணனை உடனே விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவரை விடுவிக்க முடியாது என்று போலீசார் மறுப்பு தெரிவித்தனர். உடனே விவசாயிகள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள் விவசாயிகளுடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் அடைந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.