கிடப்பில் போன ரோடு பணி
நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி நகரில் ரோடு போடும் பணி
கிடப்பில் போட்டதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி நகராட்சியின் 34 வது வார்டு உட்பட்ட குறிஞ்சி நகர், லட்சுமி நகர், வடிவேல் கண்ணாபுரம் ஆகிய பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வவசித்து வருகின்றனர். இப்பகுதியில்
கடந்த ஓராண்டுக்கு முன்பு தார் ரோடு போடும் பணி தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக ஜல்லி கற்களை கொட்டி பரப்பி விட்டதுடன் ரோடு போடும் பணி கிடப்பில் போடப்பட்டது. சட்டமன்றத் தேர்தல், தொடர்மழை என அடுத்தடுத்த காரணங்களை மட்டுமே கூறிய நகராட்சி நிர்வாகம் ரோடு போடும் பணியை தொடரவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து குறிஞ்சி நகர் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. வார்டு தலைவர் விவேக் தலைமை வகித்தார். நகரத் தலைவர் மணிகண்ட குமார், ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விரைவில் ரோடு போடும் பணியை முடிக்காவிட்டால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவது உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட தயாராக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.