மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் வணிக வளாகக் கடைகளை, விதிகளை மீறி தி.மு.க புள்ளிகள் கைப்பற்றிக்கொள்ள முயல்வதாக பா.ஜ.க மாநகரத் தலைவர் டாக்டர் சரவணன் பகீர் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பா.ஜ.க மாநகர தலைவர் டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளதாவது, “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாகவும், அதை விசாரிக்கப்போவதாகவும் பேசிய தி.மு.க அரசு, இப்போது அந்தத் திட்டத்தின் பலனை அனுபவிக்கப் பார்க்கிறது. உதாரணத்துக்கு மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புராதன பெருமையைப் பாதுகாக்க 42 கோடி ரூபாய் மதிப்பில் சில திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. அதில் ஜான்சிராணி பூங்காவில் ரூ.2.45 கோடியில் புராதன பஜார் அமைக்கப்பட்டு, 12 கடைகள் கட்டப்பட்டிருக்கின்றன. மதுரை நகரம், புராதன நகரம் என்பதால் வருகிற சுற்றுலாப்பயணிகள் புராதனப் பொருள்களை வாங்கும் வகையில் இந்தக் கடைகள் கட்ட வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது.
ஆனால், சமீபத்தில் இந்தக் கடைகளை ஏலம்விடுவதற்கான மாநகராட்சியின் அறிவிப்பில், அதில் இரண்டு மட்டும் புராதனப் பொருள்கள் விற்கும் கடைகள் என்றும், மற்றவை பொதுவானவை என்றும், அதையும் தி.மு.க புள்ளிகள் ஏலத்தில் எடுத்து அதிக தொகைக்கு உள்வாடகைக்கு விடத் திட்டமிட்டிருப்பதாகவும் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்துதான், மதுரைக்குப் பெருமை சேர்க்கும் புராதன பொருள்களை விற்கக் கட்டப்பட்ட கடைகளை வேறு வணிக நோக்கத்துக்காக மாற்றக் கூடாது என்று வழக்கு தாக்கல் செய்தேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் கூறிய அவர், “பெரியார் பேருந்து நிலையத்துக்கு அருகில் கட்டப்பட்டுவரும் பல்லடுக்கு வணிக வளாகத்திலிருக்கும் 400-க்கும் மேற்பட்ட கடைகள், குன்னத்தூர் சத்திரத்தில் கட்டப்பட்டிருக்கும் 190 கடைகளையும் தி.மு.க-வினர் கைப்பற்றிக்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் உதவிவருகிறது. நியாயப்படி அங்கு ஏற்கெனவே கடைகள் வைத்திருப்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆனால், இதிலும் முறைகேடுகள் நடப்பதாகத் தகவல் வருகிறது” எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த முறை எதிர்கட்சியாக இருந்த தி.மு.க மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூக்குரலிட்டு தற்பொழுது ஆட்சிக்கு வந்தவுடன் சத்தமில்லாமல் கடை பிடிக்க தொகையை அதிகரித்து ஊழல் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.