செய்திகள்

குளத்தை நிரப்பியது தி.மு.க.. பொங்கல் வைப்பது அ.தி.மு.க.வா..?

குளத்தை நிரப்பியது தி.மு.க.. – பொங்கல் வைப்பது அ.தி.மு.க.வா..?

30 ஆண்டுகளுக்கு பிறகு குளத்தை நிரப்ப காரணமாக இருந்தது யார் என்று தி.மு.க., அ.தி.மு.க. வினரிடையே மோதல் ஏற்பட்டது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டத்திற்குட்பட்ட கோதவாடி கிராமத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது கோதவாடி குளம். இந்த குளத்தில் சேமிக்கப்படும் மழைநீர் மற்றும் பி.ஏ.பி கால்வாய் மூலம் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயனடைந்து வந்தன. ஆனால் கடந்த 1991ம் ஆண்டுக்கு பிறகு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நீரின்றி இந்த குளம் வறண்டு காணப்பட்டது. இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்வரின் உத்தரவுப்படி பி.ஏ.பி. கால்வாயின் உபரி நீரை கோதவாடி குளத்திற்கு வழங்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக கோதவாடி குளம் 30 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கிறது.
இந்நிலையில் பொள்ளாச்சி எம்.எல்.ஏ. ஜெயராமன் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் குளத்தை பார்வையிட வந்தார். முன்னதாக குளக்கரையில் உள்ள கோவிலில் பொங்கல் வைத்து வழிபடவும் அ.தி.மு.க. வினர் ஏற்பாடு செய்திருந்தனர். இத்தகவல் அறிந்ததும் தி.மு.க. கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர்.வரதராஜன், ஒன்றிய பொறுப்பாளர்கள் செட்டியக்காபாளையம் துரை, கன்னிமுத்து, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் வேலுமணி உள்ளிட்ட ஏராளமான தி.மு.க. வினர் அங்கு குவியத் தொடங்கினர். கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பொள்ளாச்சி டி.எஸ்.பி. (பொறுப்பு) சீனீவாசன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்தனர்.
குளம் நிரம்ப காரணமாக இருந்தது போல் அ.தி.மு.க. வினர் இங்கு அரசியல் செய்வதை அனுமதிக்க முடியாது என்று தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குளத்தை நிரப்புவது தி.மு.க., பொங்கல் வைப்பது அ.தி.மு.க. வா என கோஷங்களை எழுப்பிய திமுகவினர், இங்கிருந்து எம்.எல்.ஏ. வை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது. நிலைமையை உணர்ந்த போலீசார் எம்.எல்.ஏ. ஜெயராமன் மற்றும் அ.தி.மு.க. வினரை குளக்கரையில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.

அங்கு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை தொடர்பாக, எம்.எல்.ஏ. ஜெயராமன் மற்றும் அ.தி.மு.க. வினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. வினர் போலீசில் புகார் மனுவும் அளித்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button