தடை செய்யப்பட்ட புகையிலை
4.5 கிலோ பறிமுதல்
மளிகைக்கடை உரிமையாளர் கைது
பொள்ளாச்சியை அடுத்த நெகமத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற மளிகைக் கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரதினம் உத்தரவின்பேரில் பொள்ளாச்சியில் அமைக்கப்பட்ட தனிப்படை பிரிவு போலீசார் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் நெகமம் பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஒரு மளிகைக் கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை உதவி ஆய்வாளர் தெய்வேந்திரன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட மளிகைக் கடையை ரகசியமாக கண்காணித்தனர். அதில் அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது உறுதியானது.
தனிப்படை போலீசார் கொடுத்த தகவலின் பேரில் நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவண பெருமாள் தலைமையில் போலீசார் சம்மந்தப்பட்ட மளிகைக் கடைக்கு சென்றனர்.
அங்கு ஆய்வு செய்து 4.5 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் மளிகைக்கடை உரிமையாளரான தங்கவேல் என்பவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் திடீரென அவர் உடல்நிலை சரியில்லாமல் மயக்கமானார்.
போலீசார் உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் ஒன்றை வரவழைத்து பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அவர் மயக்கமாகி உள்ளார் என்றும், மற்றபடி அவர் நன்றாக உள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர். சிகிச்சை முடிந்து அவர் மருத்துவமனையிலிருந்து திரும்பியதும் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.